History of Film | இப்பதான் கதையே ஆரம்பிக்குது | Part 6 | Tanglish News

History of Film அறுபதுகளின் மற்றொரு முக்கிய சிறப்பு, நட்சத்திரங்கள் அரசியலில் ஈடுபட்டது. சுதந்திரப் போராட்டத்தின் போது எஸ். சத்தியமூர்த்தியின் உந்துதலினால் கே.பி.சுந்தராம்பாள், வி. நாகையா உட்பட பல திரைப்படக் கலைஞர்கள் அரசியலில் ஈடுபட்டனர்.

இந்த ஈடுபாடு பிற்காலத்திலும் தொடர்ந்தது. தமிழ்நாட்டில் திரைப்படமும், அரசியலும் பின்னிப் பிணைந்திருக்கும் சமீபகால வரலாறு, உலகின் பல பாகங்களிலிருந்தும் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

திராவிட இயக்கங்களுடன் இணைந்திருந்த என். எஸ். கிருஷ்ணன்,கே. ஆர். ராமசாமியிலிருந்து பின்னர் எம்.ஜி.இராமச்சந்திரன், எஸ். எஸ். ராஜேந்திரன் உட்பட பலர் நேரடி அரசியலில் இறங்கினர்.

1967ல் தேனி பகுதியிலிருந்து எஸ்.எஸ்.ஆரும், பரங்கி மலை தொகுதியிலிருந்து எம்.ஜி.ஆரும் தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபையில் நுழைந்தனர்.

எம்.ஜி.ஆரின் படங்களில் வசனங்களின் மூலமாகவும் குறியீடுகள் மூலமாகவும் கட்சிப் பிரச்சாரம் வெளிப்படுத்தப் பட்டது. வண்ணப்படங்களில் அரசியல் கட்சிகளின் கொடியின் நிறங்கள்; குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டன.

இத்துடன் ரசிகர் மன்றத்தின் ஆதரவும் சேர்ந்து, நட்சத்திர அரசியல்வாதிகளின் கைகளைப் பலப்படுத்தியது.

1972இல் தி.மு.கவிலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தனிக் கட்சியைத் துவங்கினார் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தின் ஆதரவுடனும், நட்சத்திர ஆளுமையின் துணையுடனும் அவரது அரசியல் வாழ்வு உயர்ந்தது.

History of Film 1977 இல் எம்.ஜி.ராமசந்திரன் தமிழக முதல்வரான பின், திரைப்படத்துறைக்குப் பயனளிக்கும் திட்டங்கள் சிலவற்றை அமுலாக்கினார்.

மூப்படைந்த திரைப்படக் கலைஞர்களின் ஓய்வூதியத்தை ரூ.75ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தினார். சிறந்த படங்களுக்கு மானியம் கொடுக்கும் திட்டம் இவர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது.

(அரசியல் சார்ந்த சினிமாவை பற்றி தனி பதிவில் பார்க்கலாம்)

தென்னிந்தியாவின் முதல் “சினிமாஸ்கோப்” படமான ராஜ ராஜ சோழன் (திரைப்படம்) (1973), வர்த்தக ரீதியாக குறிப்பிடத்தக்க வெற்றி ஏதும் பெறவில்லை.

எழுபதுகளில் அடையாறு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சிலரின் தாக்கம் தமிழ்த் திரைப்படத்தில் வெளிப்பட ஆரம்பித்தது. 1972 இல் திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்ற சிலர் சேர்ந்து தயாரித்த தாகம், யதார்த்த திரைப்பட பாணியில் அமைந்திருந்தது.

பல புதிய, இளைஞர்கள் தமிழ்த் திரைப்பட உலகில் பிரவேசித்து அதன் எல்லைகளை விரிவாக்கினர்.

இந்த ஆண்டுகளில் தான் தமிழ்த் திரைப்படத்தில் மூன்று ராஜாக்களின் வரவு பெரிய சலனத்தை ஏற்படுத்தியது. பாரதிராஜா, பாக்கியராஜ், இளையராஜா ஆகியோரே இம்மூவர்.

பாரதிராஜாவின் முதல் படம் பதினாறு வயதினிலே 1977.ல் வெளிவந்தது. புதிய நடிகர்கள், இளையராஜாவின் இசை, கிராமியப் பின்னணி, யதார்த்தத்தில் அழுத்தம் இவைகளே பாரதிராஜா படைப்புகளின்; முக்கிய அம்சங்கள்.

நாடக நடிப்பை விட்டு இயல்பு நடிப்பை பின்பற்ற இவர் முயற்சி செய்தார். 1979இல் சுவரில்லாத சித்திரங்கள் மூலம் பாக்கியராஜ் இயக்குநரானார். நகைச்சுவை கலந்த கதையோட்டம், பாலியல் அழுத்தம் இவை பாக்கியராஜ் படங்களின் வெற்றிக்கு காரணமாயிருந்தது.

இந்த ஆண்டுகளில் மற்றொரு முக்கிய நிகழ்வு இளையராஜாவின் வளர்ச்சி. 1976ல் அன்னக்கிளி படத்திற்கு முதல் முறையாக இசையமைத்த இளையராஜா, வெகு விரைவிலேயே நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்தார்.

இவர் இதுவரை நான்கு தென்னிந்திய மொழி திரைப்படங்களில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஜே.மகேந்திரன் இயக்குநராக முள்ளும் மலரும் (1978) படத்தில் அறிமுகமானதும் இவ்வேளையில்தான். அவரது அடுத்த படமான உதிரிப்பூக்கள் யதார்த்த பாணியில் அமைந்து தமிழின் முக்கியத் திரைப்படங்களில் ஒன்றாக இடம்பெற்றது.

பூட்டாத பூட்டுக்கள், நண்டு போன்ற படங்கள் இன்றும் இவரது தனித்துவத்தை சொல்லும் படங்கள். ஆனால் இவர் இயக்கிய அனைத்து படங்களும் புத்தகங்களாக வெளிவந்தவை தான்

1975ல் அவளும் ஒரு பெண்தானே படத்தின் மூலம் துணை இயக்குநராக அறிமுகமானார். பசி (1979) இவருக்கு தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பிடித்துக் கொடுத்தது, அப்படத்தில் நடித்த ஷோபா அகில இந்தியாவின் சிறந்த நடிகை விருதைப் பெற்றார்.

(விருது பெற்ற சில மாதங்களிலேயே ஷோபா தற்கொலை செய்து கொண்டார். நடிகைகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது தமிழ்த் திரையிலகிற்கு புதிதல்ல. விஜயஸ்ரீ, படாபட் லட்சுமி, கல்பனா, லட்சுமிஸ்ரீ, சில்க் ஸ்மிதா என பட்டியல் நீள்கிறது).

புனே திரைப்படக் கல்லூரியில் திரைப்படக் கலையை முறையாகப் பயின்ற பாலு மகேந்திராவின் முதல் படம் அழியாத கோலங்கள் (1979) வெளிவந்தது.

இதற்க்கு பின் சினிமா வேறு ஒரு களத்தில் பயணிக்க தொடங்கியது.

Next  Part-5

 

Leave a Comment